Wednesday, 22 February 2012

அதென்னங்க பங்குச் சந்தைனா?


                       பொற்புதையல், பொற்சுரங்கம், அமுதசுரபி. ஆம்! உண்மைதான். மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்றை பங்குச்சந்தைக்கு நீங்கள் ஒப்பீடாகக் கொள்ளலாம். அப்படியென்றால் பங்குச்சந்தையில் நுழைந்துவிட்டால் போதும், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிவிடுமா என்ற உங்கள் கேள்வி என் காதில் கேட்கிறது.
  என் பதில் “ ஆம் ”.
  
           பங்குச்சந்தை பணம் கொட்டிக்கிடக்கும் சுரங்கம் தான். ஆனால் அதை அள்ளிக் கொண்டு வர கொஞ்சம் சாதூர்யமும், கொஞ்சம் நிதானமும், கொஞ்சம் படிப்பறிவும், கொஞ்சம் பட்டறிவும் தேவைப்படுகிறது.
       அடடே! அப்போ முதலீட்டிற்குப் பணம் தேவையில்லயா..?

       தேவைதான். ஆனால், அதைவிட மேலே சொன்ன விஷயங்கள் தான் ரொம்ப முக்கியம். அந்த வரிசையில் பணம், கையைக் கட்டிக் கொண்டு கடைசியில் தான் நிற்கிறது. அதாவது, பங்குச்சந்தைக்கு முதலீட்டுப் பணம் என்பது,வாகனத்திற்கு பெட்ரோல் போன்றது. வெறும் பெட்ரோலை மட்டும் வைத்துக்கொண்டு பயணத்திற்கு ஆசைப்பட்டால் நடக்குமா? என்ன செய்வது நமக்கு வாய்த்த வழிகாட்டிகள் பணத்தைப் பிரதானப்படுத்தி முன்மொழிந்து விட்டனர்.

          பணத்தைப் பிரதானப்படுத்தி தானே சூதாட்டம்? பங்குச் சந்தை ஒரு சூதாட்டம் என்று தானே சொல்கிறார்கள்? என்றும் சிலர் கேட்கின்றனர்.

 எந்தவொரு தொழிலும் சூதாட்டம் தான் நன்பர்களே. எப்பொழுது….? அந்தத் தொழிலின் அடிப்படை தெரியாமல், வெறும் பண முதலீட்டை மட்டும் நம்பி செய்தால் அது சூதாட்டமே!
 கொஞ்சம் தெளிவா பார்க்கலாமா?

          எடுத்துக்காட்டாக பலசரக்கு மளிகைக் கடையை எடுத்துக் கொள்வோம். அதில் உள்ள பொருள் பெரும்பாலும் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கவல்லது. உங்களிடம் உபரியாக பல லட்சங்கள் இருக்கிறது என்பதற்காக நீங்கள் ஒரு கடை துவங்கி வெற்றிகரமாக நடத்த முடியுமா? எந்த பொருளை எப்பொழுது, எவ்வளவு, என்ன விலைக்கு வாங்கவேண்டும் என்றும், என்ன விலைக்கு விற்கவேண்டும், எவ்வளவு நாட்களில் விற்க வேண்டும் என்பது போன்றவை தெரியாமல், வெறும் பணமுதலீடு உங்கள் பணத்தை வளர்த்துக் கொடுக்கும் என்று நம்பிச் செய்து, அது வெற்றி பெறாமல் போனால் யாருடைய தவறு? அந்தத் தொழிலின் மீதா அல்லது அந்த முதலீட்டாளர் மீதா?
            
                நிச்சயம் முதலீட்டாளர் மீது தானே?

         அது போல தான் பங்குச் சந்தை பற்றிய அடிப்படை தொழிலறிவை வளர்த்துக்கொண்டு முதலீடு செய்தால் நிச்சயம் தொடர்ச்சியாக இலாபம் அடையலாம்.

 பங்கு பங்கு என்கிறார்களே… எதைத் தான் பங்கு போடுகிறார்கள்? என்ன தான் அப்படி பங்கு தருகிறார்கள்…?

ஒரு மளிகைக் கடையை எடுத்துக் காட்டாக கொண்டு இதற்கான விளக்கத்தைப் பார்ப்போம். கடையின் பெயர் “ முல்லை மளிகைக் கடை” கடையின் முதலாளி பெயர் ”அருண்”.
      அருண், கடந்த 10 வருடங்களாக நகரின் மையப் பகுதியில் ”சுபம்” மளிகைக் கடையை நடத்தி வருகிறார். மொத்த மற்றும் சில்லரை வணிகம் செய்து வருகிறார். கடையின் வியாபாரம் நல்ல நிலையிலேயே போய்க் கொண்டிருக்கிறது. அருணின் அனுபவத்தை ஒப்பிடும் போது கடையின் அளவு குறைவானது தான். இந்த சூழ்நிலையில் அருண் கடையை விரிவு செய்ய விரும்புகிறார். ஆனால் போதிய பணவசதி இல்லை. யாரையேனும் ஓரிருவரைப் வியாபாரப் பங்காளிகளாகச் சேர்க்கலாம். ஆனால், வரும் பங்காளிகளின் தலையீடு இருந்தால், திறம்பட தொழில் செய்ய இயலாது. எனவே அவர் பொது மக்களிடம் பணம் திரட்ட முடிவு செய்கிறார். அவரின் கடையின் இப்பொழுதைய மதிப்பீடு, ரூ50 இலட்சம். இன்னும் 1 ½ கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஒரு பங்கின் விலை (முகமதிப்பு) ரூ 10/- என சுமார் 20 இலட்சம் பங்குகளாகப் பகிர்கிறார். (அதாவது, ஏற்கனவே கடையின் மதிப்பு 50 இலட்சம்+ தேவைப்படும் தொகை 1 ½ கோடி. ஆக மொத்தம் 2 கோடி ரூபாய்க்கான பங்குகளை ரூ10/- க்கு 20 இலட்சம் பங்குகள்).


இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்த 1 1/2 கோடி ரூபாய்க்கான விரிவாக்கத் திட்டம் என்ன? தொழில் விரிவாக்கத்தின் அவசியம் என்ன? போன்ற விபரங்களை முன் கூட்டியே மக்களுக்கு விளக்கங்கள் கொடுக்க வேண்டும். எ:கா: மொத்த வியாபாரத்திற்கான கிடங்கு (Godown).அமைத்தல், நவீன டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நிறுவுதல், சரக்குப் போக்குவரத்திற்காக வாகனங்கள் வாங்குவது போன்றவை.
       
       இதில் 10 இலட்சம் பங்குகளை அருணே வைத்துக் கொண்டு, மீதியுள்ள 10இலட்சம் பங்குகளை வினியோகிக்கிறார். நிர்வாகத்தில் மற்றவர்களின் ஆதிக்கம் நேரடியாக இல்லாமல் பார்த்துக் கொள்ள ஒரு தனி நபருக்கு 1000 பங்குகளுக்கு மேல் கிடையாது, தனியொரு நிறுவனங்களுக்கு 10,000 பங்குகளுக்கு மேல் கிடையாது என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் வினியோகிக்கிறார். இப்படி பங்குகளை விற்பதன் மூலம் தன் தொழிலுக்குத் தேவையான பணத்தை திரட்டிக்கொள்கிறார்.
       
       ஒரு சந்தேகம். நம்ம அருணுக்குத் தேவையோ 1 ½ கோடி. அதற்கு அவர் 15 இலட்சம் பங்குகளை(ரூ10/- மதிப்பு) விற்றால் தானே அவருக்குத் தேவையான பணம் கிடைக்கும்? அவர் பாதி பங்குகளை( 10 இலட்சம்) மட்டும் விற்பதாகவும், அவருக்குத் தேவையான பணத்தையும் திரட்டிவிட்டார் என்று சொல்கிறீர்கள். எங்கேயோ இடிக்கிறதே…?
    வேறொன்றுமில்லை, ஒரு பங்கின் விலை ரூ 20/- என்று விற்கிறார். முகமதிப்பினை விட அதிகமாக இருக்கும் தொகையினை ப்ரீமியம் (Premium) எனப்படும்.

     இப்படி வழங்கப்பட்ட பங்கினை, நான் முந்தி, நீ முந்தி என்று ஓடிப்போய் வாங்கினால், பங்கின் விலை உயருகிறது. முந்தியடித்துக் கொண்டு விற்றால், பங்கின் விலை சரிகிறது.
                                 ***-------------------------------------------***
உங்களது சந்தேகங்களை கமெண்ட்களின் வாயிலாகக் கேட்கலாம். விளக்கங்கள் அளிப்பதில் மகிழ்ச்சி கொள்வேன்.

1 comment:

  1. நல்ல தொடக்கம்.... அருமை

    ReplyDelete